LECO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் DIMO மற்றும் DHYBRID பங்குடமையுடன்ஆரம்பித்து வைக்கும் தன்னிறைவு ஆற்றலுடனான (Microgrid) முதன்முதல் மின்சார உற்பத்திச் செயற்திட்டம்

Lanka Electricity Company (LECO) நிறுவனம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிடன் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக ரூபா 325 மில்லியன்) தொகை கொண்ட தன்னிறைவு ஆற்றலுடனான ஒரு முன்னோடி மின்சார உற்பத்தி மாதிரி செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. மின் உற்பத்தி மற்றும் தேக்ககத்தை உள்ளடக்கிய விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தன்னிறைவு ஆற்றலுடனான மின்சார உற்பத்தியை வழங்குவதற்காக DIMO மற்றும் ஜேர்மனிய நிபுணத்துவ நிறுவனமான DHYBRID ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றி மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரிச் செயற்திட்டமாகும்.

இந்த மாதிரி செயற்திட்டத்தில் வணிகரீதியான தன்னிறைவு ஆற்றலுடனான மின்சார உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியுடன் இணைந்த அபிவிருத்தி வசதி உள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்மார்ட் மின்சார விநியோக கட்டமைப்புக்களின் இயல்பு குறித்த ஆய்வுகளுக்கான ஆராய்ச்சித் தளமாக பயன்படுத்தப்படும். வணிகரீதியான தன்னிறைவு ஆற்றலுடனான மின்சார உற்பத்தி மற்றும் உபகரணங்கள் மற்றும் உருவகப்படுத்துதல் சூழலில் இருந்து பெறப்பட்ட தரவு இந்த ஆராய்ச்சியுடனான அபிவிருத்தி செயல்பாடுகள் முன் வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி இலக்குகளை அடைவதற்கு உதவும். “LECO Smartgrid Laboratory” ஆய்வுகூடத்தை நிறுவுவதில் மொரட்டுவை பல்கலைக்கழகம் LECO வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், மேலும் இந்த வசதி முதல் 20 ஆண்டுகளுக்கு LECO வினால் பேணிப் பராமரிக்கப்படும். இலங்கையில் தூய்மையான எரிசக்தி வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உதவியின் ஒரு பகுதியாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவிற்கான எரிசக்திப் பிரிவு இந்த செயற்திட்டத்தை எண்ணக்கருவாக வடிவமைத்துள்ளது. இத்தகைய புதிய எண்ணக்கருக்களை தழுவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் முன்னோடி விநியோக பயன்பாடுகளில் ஒன்றான LECO, இந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கான தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழக வளாகம் கொண்டுள்ள பல அனுகூலங்கள் காரணமாக துறைகளுக்கிடையிலான முன்னோடி செயற்திட்டத்திற்கான தளமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகம் தனது கூரைகள் மற்றும் ஆய்வக அமைவிடத்தை இந்த நோக்கத்திற்காக வழங்கவுள்ளதுடன், இது அமைக்கப்பட்டதன் பின்னர் நிர்ணயிக்கப்படும் ஒரு தொகுதி இலக்குகளை மொரட்டுவை பல்கலைக்கழகம் அடையப் பெறல் வேண்டும். ஆரம்ப முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவற்றிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தூய்மையான எரிசக்தி நிதி கூட்டாண்மை வசதி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

 “இலங்கையின் எரிசக்தித் துறை வளர்ச்சியில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது ஒரு நீண்ட கால பங்காளராக இருந்து வருகிறது. தூய்மையான எரிசக்திக்கான எங்கள் உதவிகளில், இலங்கையின் மன்னாரில் அமைந்துள்ள முதலாவது பாரிய அளவிலான 100 மெகாவாட் காற்றாலை பூங்கா, மொரகொல்லவில் 30 மெகாவாட் நீர் மின்னுற்பத்தி நிலையம் மற்றும் சூரியக்கல கூரையமைப்பு கடன் வசதி ஆகியவை அடங்கும். இதேபோல், விநியோகம் மற்றும் முதன்மை விநியோக மட்டத்தில் விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து மின் வெளியேற்றத்தை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி துணைபுரிகிறது. விநியோகம் மற்றும் தேவை ஆகிய இரு முனைகளிலும் எரிசக்தி வினைத்திறன் மேம்பாடுகளுக்கும் அது ஆதரவை வழங்கி வருகின்றது. புதிய மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளுடன் தூய்மையான எரிசக்தியை மையமாகக் கொண்ட, இலங்கையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான எரிசக்தி துறை வளர்ச்சியை ஆதரிப்பதில் ஆசிய அபிவிருத்தி வங்கி எப்போதும் உறுதி பூண்டுள்ளது,” என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளரான கலாநிதி சென் சென் அவர்கள் கூறினார்.

LECO வின் பதில் பொது முகாமையாளரான கலாநிதி நரேந்திர டி சில்வா கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப பாதுகாப்பான மற்றும் இடையூறுகளில்லாத மின்சார விநியோகத்தை பேணிப் பராமரிக்க LECO எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த செயற்திட்டம், தடங்கல்கள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளின் போது ஏற்படும் செயலிழப்புகள் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் மின் தடங்கல்களுக்கான தீர்வாக உருவாக்கப்படும். இத்தகைய மின்சார விநியோக செயலிழப்புக்களின் போது, solar inverters களும் anti-islanding protection பாதுகாப்பு முறைமை மூலம் கட்டமைப்பிலிருந்து விலகுகின்றன. மேலும் சூரிய மின்சாரம் மூலம் தங்கள் வீட்டை அல்லது வளாகத்திற்கு போதிய மின்சாரம் பெறும் அளவில் எரிசக்தி ஆற்றல் கொண்ட வாடிக்கையாளரைக் கூட வெளியேற்றுகின்றன. இதனால் அவர்களுக்கும் மின் விநியோகம் தடங்கல் ஏற்படுவதற்கு வழிகோலுகின்றது,” என்று குறிப்பிட்டார்.

“தன்னிறைவு ஆற்றல் கொண்ட மின்சார உற்பத்தி செயற்திட்டங்கள் இந்த சிக்கல்களுக்கான தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விநியோக வலையமைப்பின் உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் மற்றும் மின்சார விநியோகம் கிடைக்காதபோது வலையமைப்பிற்கு மின்வலுவை அளிக்க முடியும். ஏனெனில் தலைகீழ் மின்வலுப் பாய்ச்சல் போன்ற தேக்கக சிக்கல்கள் இருக்கும்போது அதிக மின்வலுவை சேமிக்க முடியும். மேலும் அடுத்தடுத்த மின்னழுத்த சிக்கல்களும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், மின்சாரம் வழங்கலில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக, ஏனைய மின்மாற்றிகள் மற்றும் ஒத்த வளாகங்களுக்கான எண்ணக்கருவை பிரதிபலிக்கும் வாய்ப்புக்களுக்கான தேடலில் LECO ஈடுபடுவதுடன், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் சர்வதேச அளவில் பகிரப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் உதவிகளையும் அவர் எடுத்துரைத்தார், குறிப்பாக, எரிசக்தி துறை குழுவின் தலைவரான கலாநிதி யோங்பிங் ஜாய், தெற்காசியா எரிசக்தி பிரிவின் பணிப்பாளரான கலாநிதி பிரியந்த விஜயதுங்க, கலாநிதி முக்தோர் கமுட்கானோவ், கலாநிதி அய்மிங் ஷோ, மற்றும் திரு. ரணிஷ்க விமலசேன, கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய மற்றும் திரு. உபாலி தரணகம ஆகியோர் இந்த புதுமையான எண்ணக்கருவை வடிவமைப்பதில் ஆற்றிய பங்களிப்பினை விசேடமாகக் குறிப்பிட்டார்.

DIMO வின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் கூறுகையில், “பரிமாற்றம் மற்றும் விநியோகத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தி மூலம் மின் துறையில், முக்கியமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையமாகக் கொண்டு, குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் உள்நாட்டு மின்சார விநியோகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே எங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாக்கியம் என்றே கூறவேண்டும். எங்கள் ஜேர்மனிய கூட்டாளரான DHYBRID உடன் அறிவைப் பகிருவதுடன், இந்த செயற்திட்டத்தை செயல்படுத்த DIMO இன் உயர் தகமை மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தன்னிறைவு ஆற்றல் கொண்ட மின்சார உற்பத்தி எண்ணக்கருவை வளர்ப்பதில் நிபுணத்துவத்தை மேம்படுத்த இந்த திட்டம் DIMO வுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். DIMO கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையின் பயன்பாட்டு மின்சார விநியோக நிர்மாணிப்பில் பங்களிப்பாற்றி வந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.  

DIMO பணிப்பாளரான விஜித் புஷ்பவல அவர்கள் கூறுகையில், “தன்னிறைவு ஆற்றல் கொண்ட மின்சார உற்பத்தி செயற்திட்ட எண்ணக்கருவானது இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பரீட்சிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதுடன், இது மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் சமீபத்திய புத்தாக்கமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மின் பரிமாற்றத்தை முற்றிலுமாக விலக்கி, நிதியியல்ரீதியான நன்மைகளை வழங்குவதுடன், மின்வலுவின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இந்த எண்ணக்கரு இலங்கைக்கு பொருந்தினால், தேசிய மின்சார விநியோகத்தை மேம்படுத்த நீண்ட கால அடிப்படையில் தன்னிறைவு ஆற்றல் கொண்ட மின்சார உற்பத்தி செயற்திட்டங்களை ஸ்தாபிப்பது குறித்து நாடு பரிசீலிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

DHYBRID இன் இலங்கைக்கான முகாமையாளரான ஃபேபியன் பாரெட்ஸ்கி கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் பங்காளரான DIMO வுடன் சேர்ந்து, இலங்கையில் எரிசக்தி கட்டமைப்பின் ஆர்வமூட்டும் மாற்றத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்விநியோகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடுருவலை அதிகரிப்பதில் LECO ஆனது ஒரு இலட்சியத்துடனான மற்றும் மேம்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்றும், அதே நேரத்தில் மின்விநியோகத்தின் விரிதிறனை மேம்படுத்துகின்றது என்றும் நாங்கள் நம்புகிறோம். DIMO வுடன் இணைந்து, நாடு மிகவும் சுயாதீனமான மற்றும் பசுமையான எரிசக்தி அமைப்பை நோக்கி மாறுவதற்கு மேலும் உதவுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார். DHYBRID என்பது கைத்தொழில்கள், பயன்பாடுகள் மற்றும் தீவுகளுக்கான புதுப்பிக்கத்தக்க மற்றும் கலப்பின எரிசக்தி கட்டமைப்புகளின் விசேட சர்வதேச தீர்வு வழங்குநராகும். அவை டீசல் மின்பிறப்பாக்கிகள் அல்லது நிலையற்ற பயன்பாட்டு மின்விநியோகங்கள் போன்ற வழக்கமான எரிசக்தி விநியோகத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் தேக்கக தொழில்நுட்பத்துடன் இணைக்கின்றன. இவை நேர்த்தியான கட்டுப்பாட்டுடன், விரிவாக காட்சிப்படுத்தப்படுகின்றன.

DIMO மற்றும் DHYBRID ஆகியவற்றுடன் இணைந்து வலுவான நிபுணத்துவம் மற்றும் பரந்த அனுபவமுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, LECO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இந்த பங்குடமை, இலங்கையின் தூய்மையான எரிசக்தி மேம்பாட்டிற்கான வலுவான உந்துதலுக்கும், 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் 70% மின் உற்பத்தியை தூய்மையான எரிசக்தி மூலங்களிலிருந்து அடைவதற்கான இலக்கையும் அடைந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *