இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பின் ஆரம்ப விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த பிரம்மாண்டமான ஆரம்பவிழா விழா 2024 ஜனவரி 06 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஏட்ரியம் லொபியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக, தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவருடன் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் விராஜ் டி சில்வா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் கலாநிதி கிங்ஸ்லி பேர்னாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் செழுமையான பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக FACETS கண்காட்சிகள் எப்பொழுதும் திகழ்ந்து வருவதோடு, இந்த வருடமும் அது விதிவிலக்கல்ல. இந்த கண்காட்சியானது, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கொள்வனவாளர்களை ஈர்க்கும் வகையில், நாட்டின் தனித்துவமான இரத்தினக்கற்களின் சேகரிப்பை உலகிற்கு வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
FACETS Sri Lanka கண்காட்சியின் 30ஆவது பதிப்பானது, இலங்கையின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண பாரம்பரியத்தின் சாரத்தை காண்பிக்கும் பல கூடங்களைக் கொண்டுள்ளது. பார்வையாளர்கள் Premier Gem Pavilion, Premier Jewellery Pavilion, Sustainable Pavilion, Sapphire Masterpiece Pavilion, Gem Lab Pavilion, NGJA SME Pavilion, SLGJA Gem and Jewellery Pavilion உள்ளிட்ட கூடங்களை பார்வையிடலாம். இவை ஒவ்வொன்றும் இலங்கைக்கு உரித்தான உயர்தரமான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகின்றன.
Sustainability Pavilion ஆனது, 2,500 வருட பழமையான இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையின் அழகிய பயணத்தை அதன் ஆரம்பம் முதல் இன்று வரையில் காட்சிப்படுத்தவுள்ளது. இதேவேளை, Masterpiece Pavilion ஆனது, உலகில் இதுவரை வேறு எங்கும் காட்சிப்படுத்தப்படாத, ஒப்பிட முடியாத வகையிலான பாரிய இரத்தினக் கற்கள் மற்றும் தனித்துவமான கற்களைக் காட்சிப்படுத்துகின்றது.
FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உறுதியளிப்பதோடு, இத்துறையின் பாரம்பரியத்தை புத்தாக்கத்துடன் இணைத்து இலங்கையின் கவர்ச்சிகரமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் விரிவான தோற்றத்தை காட்சிப்படுத்துகிறது. இலங்கையின் விலைமதிப்பற்ற இரத்தினங்களின் பொக்கிஷங்களின் அழகு, பன்முகத்தன்மை, நிலைபேறான தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இக்கண்காட்சி தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது.