அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வெளியிடும்
ஊடக அறிவித்தல்
அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஒழுங்குசெய்த Zero Chance (ZR chance) பாடசாலைகளுக்கு இடையிலான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களைப் பாராட்டும் வைபவம் கடந்த தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் சிறப்பாக நடந்தேறியது. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கடல்வழி புலம்பெயர்வு குறித்து விழிப்புணர்வூட்டுவதும் சட்ட விரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சிக்கும் வீண் முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்துவதும், இப்போட்டித் தொடரை ஒழுங்குபடுத்துவதன் முக்கிய நோக்கமாக அமைந்தது. மேலும், இந்நாட்டு மாணவ மாணவியர்களின் ஆக்க இயலுமை சார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்வதன் மூலம், அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து இந்நிகழ்ச்சியின் ஊடாக சமூக மயப்படுத்தப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இப் போட்டியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏறத்தாழ 1800 மாணவ மாணவியர்கள் பங்குபற்றினார்கள். தரம் 9 முதல் தரம் 11 வரையிலும், தரம் 12 முதல் தரம் 13 வரையிலுமான இரு வயதுப் பிரிவுகளின் கீழ் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ‘சட்டவிரோத கடல்வழி புலம்பெயர்வினைத் தவிர்ப்போம்’ எனும் தலைப்பினை மையமாகக் கொண்டு, மாணவ – மாணவியர்கள், தமது ஆக்கத்திறன் மற்றும் எண்ணக்கரு ரீதியான ஆற்றல்களை இதன்போது சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததுடன், கல்வி அமைச்சினால் பெயர் குறிப்பிடப்பட்ட 14 நபர்களை உள்ளடக்கிய திறமையானதொரு நடுவர் குழாமினால் இதன் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திரு.போல் ஸ்டீவன்ஸ் இந்நிகழ்ச்சி தொடர்பிலான தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தார்;, ‘இது வெறுமனே ஒரு சித்திர அல்லது கட்டுரைப் போட்டியாக மட்டுமன்றி, எதிர்காலத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக படைப்பாளிகளை அடையாளம் காணுமொரு மேடையாகவும் கருதப்படுதல் வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் புலம்பெயர்வுகளை நிறுத்துதல், தேச எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பற்ற கடல் பிரயாணத்தின்போது ஏற்படும் உயிர் ஆபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கிலான, இராணுவ தேச எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை வேலைத்திட்டமான ‘Operation Sovereign Borders’ (எல்லை இறைமை நடவடிக்கை) ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்துள்ளன. Zero chance விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சியானது, இதன் வெற்றியினை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது. பாடசாலை மாணவ மாணவியர்கள் இப்போட்டித் தொடர் மீது காட்டிய அக்கறை பாராட்டத்தக்கது. இதற்காக இவர்களை ஊக்குவித்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திரு.ஸ்டீவன்ஸ் “கல்வி அமைச்சினால் பெயர் குறிப்பிடப்பட்ட கௌரவ நடுவர் குழாமின் தீர்ப்பின் ஊடாக போட்டியாளர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். பாடசாலை மாணவ, மாணவியர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்கள் வழியாக, அவர்கள் இதன் கோட்பாட்டு ரீதியான யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படுகின்றது. ‘சட்டவிரோத கடல் வழி புலம்பெயர்வினைத் தவிர்த்தல்’ தொடர்பிலான அவர்களது அறிவு மற்றும் ஆற்றலினை நான் பாராட்டுகின்றேன்” எனத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நிஹால் ரணசிங்க இந்நிகழ்ச்சி தொடர்பில் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தார், ‘அவுஸ்திரேலியா மற்றும் இந்நாட்டு அரசாங்கம் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்கு முயற்சிப்பது அறிவற்றதொரு செயலாகும்’ எனும் தலைப்பில், 15 மாவட்டங்களை உள்ளடக்கியவாறு சித்திர மற்றும் கட்டுரைப் போட்டியை நடாத்தி, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு, அத்தகைய முறையற்ற செயற்பாடுகளின் தீய விளைவுகள் தொடர்பிலான தரவுகள் மற்றும் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவது பயனுறுதிமிக்கதும், பாராட்டத்தக்கதுமான ஒரு செயற்பாடாகும்’ என்று கூறினார்.
இப்போட்டியில் வெற்றியீட்டிய சகல போட்டியாளர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடனான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாற்றல்களை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களது ஆற்றல் மற்றும் இயலுமைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் பாடநெறிகளுக்கான புலமைப் பரிசில்களை வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. கட்டுரைப் போட்டி வெற்றியாளர்களுக்கு PC Based Application குறித்த பாடநெறிக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டதுடன், சித்திரப் போட்டி வெற்றியாளர்களுக்கு அடிப்படை வரைகலை வடிவமைப்பு (கிரபிக் டிசைனிங்) (Graphic Design) குறித்த பாடநெறி க்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோத கடல்வழி புலம்பெயர்வினைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயம், இந்நாட்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கல்வி அறிவு மற்றும் ஆற்றலினை மேம்படுத்துவதில் தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றது. சட்டரீதியான புலம்பெயர்வுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்குவதும், ஒளிமயமான மற்றும் சிறப்பானதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலிய தேச எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை www.australia.gov.au/zerochance எனும் இணைத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.