Trainocate Pvt Ltd, ஒரு முன்னணி கற்றல் மற்றும் மேம்படுத்தல் வழங்குனராகும். அது சமீபத்தில் புதிய Microsoft RESET திட்டம் தொடர்பான வசதிகளை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் மிகப் பழமையான தனியார் பாடசாலைகளில் ஒன்றான Alethea உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் பாடசாலை ஒன்றில் RESET திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். Alethea ஆனது, 1928 இல் நிறுவப்பட்டது என்பதுடன், கல்வித் துறையில் 90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை அது கொண்டுள்ளது. பாடசாலைச் சூழலில் RESET திட்டத்தை செயல்படுத்துவது மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கல்வியறிவை மேம்படுத்துவதற்கும், RESET இன் உலகளாவிய பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
Alethea பாடசாலை மற்றும் Alethea சர்வதேச பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளரும் ஒருங்கிணைப்பு அதிபருமான அனித்ரா பெரேரா, இத்திட்டம் பற்றி கருத்து வெளியிடுகையில், “எமது பாடத்திட்டத்தில் RESET யின் அறிமுகமானது, எமது பாடசாலையின் டிஜிட்டல் மாற்றத்துடன் கைகோர்த்து செல்ல வழிவகுத்துள்ளது. எமது மாணவர்கள் அவர்களுக்காகக் காத்திருக்கும் டிஜிட்டல் உலகத்திற்கு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான முதற் படியே இத்திட்டமாகும். இது நாம் எமது மாணவர்களுக்கு வழங்கும் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முதல் படியுமாகும்.” என்றார்.
‘Remote End User Self Enablement Training’ (தொலைதூர இறுதிப் பயனரின் சுயமான செயலாக்கப் பயிற்சி) அல்லது RESET ஆனது, சுயமான கற்றலை நோக்கியதான, தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவுறுத்தல்களைக் கொண்ட வீடியோக்களின் நூலகத்தை கொண்டுள்ளது. மாணவர்கள் மாத்திரமன்றி தொழில் வல்லுநர்களின் அன்றாட வாழ்வில் Microsoft Office போன்ற மென்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் அவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய அடிப்படையான தெளிவை RESET வழங்குகிறது. தற்போதைய பாடத்திட்டங்களுடன் இணைந்தவாறு கைகோர்த்துச் செல்லும் அமைப்புகளை தங்களுக்கேற்றவாறு மாற்றியமைக்க ஆசிரியர்கள் RESET இனைப் பயன்படுத்த முடியும். RESET இனைப் பயன்படுத்தி, தொலைதூரத்தில் இருந்தவாறு மாணவர்கள், வகுப்பறைகள் மற்றும் பிரிவுகளை ஆசிரியர்களால் நிர்வகிக்க முடியும். அது மாத்திரமன்றி, RESET ஆனது ஆய்வுகள், கேள்வி பதில்கள், பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கொண்டுள்ளது. இது மாணவர்களின் செயற்றிறனைப் பகுப்பாய்வு செய்ய உதவுகின்றது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதி Alethea International பாடசாலையில் இடம்பெற்ற இவ்விழாவில், Microsoft SEANM இன் பிரதம பங்குதார அதிகாரியான (Chief Partner Officer) Anh Pham, ‘உயர் கல்விக்கான எதிர்கால தயார்படுத்தலுக்கான திறன்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் போது, RESET உடனான கூட்டாண்மை தொடர்பில் Anh Pham குறிப்பிடுகையில், “Alethea ஊடாக இலங்கை மாணவர்களுக்கு RESET LMS இனை அறிமுகப்படுத்தியமை தொடர்பில், SEANM பிராந்தியத்தில் எமது முக்கிய பங்காளிகளில் ஒருவரான Trainocate விற்கு பாராட்டுகளைத் தெரிவிப்பததற்கு நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த திறமையான இலங்கை தொழில்வாண்மையார்களை ஊக்கப்படுத்தப்படுகின்றனர்” என்றார்.
RESET திட்டமானது IT கல்வியின் ஒரு பெரிய இடைவெளியை நிரப்பும் பாலமாக அமைகின்றது. காரணம், இது Microsoft 365 இல் மிகக் கீழ் மட்டத்திலிருந்தான பயிற்சியை வழங்குவதோடு, இது உலகெங்கிலும் உள்ள பெருநிறுவனங்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் மென்பொருளாகவும் காணப்படுகின்றது. மாணவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க இத்திட்டம் உதவுகிறது. இதன் மூலம், திறமையான, சுய தன்னிறைவு பெற்ற பயனர்களைக் கொண்ட பணிக்குழாம் உருவாக்கப்படுகிறது.
Trainocate Pvt Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Zafarullah Hashim இக்கூட்டாண்மை தொடர்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட போது, “நாம் நீண்ட காலமாக Alethea உடன் ஒரு சிறந்த கூட்டுறவைக் கொண்டிருக்கிறோம் என்பதுடன், RESET திட்டத்தை அவர்களுடன் இணைந்து செயற்படுத்துவது அதற்கு ஒரு சான்றாக அமைகிறது. டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, இத்திட்டமானது ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்குமென நாம் நம்புகிறோம். பாடசாலை மற்றும் அதன் மாணவர்களின் முன்னேற்றத்தின் பொருட்டு எமது சேவைகளை வழங்குவதற்காக நாம் எப்போதும் காத்திருக்கிறோம்,” என்றார்.
மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தொழில்துறைக்கு தயாராகும் வாய்ப்பை RESET வழங்குகிறது. இந்நிகழ்ச்சித் திட்டமானது, தொலைவிலிருந்து முழுமையாக அணுக முடியுமான வகையில் அமைந்துள்ளது. தரம் 6 இற்கும் தரம் 11 இற்கும் இடையில் உள்ள மாணவர்களுக்கு அடுத்தடுத்த தரத்திற்கு RESET திட்டம் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படவுள்ளது. அது மாத்திரமன்றி, Trainocate Pvt Ltd நிறுவனமானது, Microsoft Role அடிப்படையிலான அதன் வழிகாட்டலின் ஒரு பகுதியாக, Microsoft 365 Fundamentals பயிற்சியையும் வழங்குகிறது. இத்திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் என்பதுடன், Alethea வினால் வழங்கப்படும் கல்வி மட்டம் மற்றும் தரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் உதவும்.