கலா பொல 2020, இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியின் 27 ஆவது தொகுப்பு, கொழும்பின் கிறீன் பாத் பகுதியை வண்ணமயமாக்கியதுடன், பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்தது. ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் கலா பொல 2020, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது. இக் கண்காட்சி 370 பதிவு செய்யப்பட்ட கலைஞர்களை கவர்ந்திருந்ததுடன், கண்ணைக் கவரும் ஓவியங்கள், உயிரோட்டமுள்ள உருவப்படங்கள், பண்பியல் ஓவியங்கள் மற்றும் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் ஈர்த்திருந்தது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவரான அதிமேதகு (திருமதி) ரீட்டா கியுலியானா மன்னெல்லா, கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த நீண்டகால நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார். இந் நிகழ்வில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர், முகாமைத்துவம் மற்றும் ஜோர்ஜ் கீற் அறக்கட்டளையின் தலைவர், அறங்காவலர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கடந்த வருடங்களைப் போல இம்முறையும் கலா பொல 2020, சிறுவர்களுக்கான கலைக்கூடத்தை கோரா ஆபிரகாம் கலை ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டிருந்ததுடன், பல குழந்தை கலைஞர்களையும் கவர்ந்திருந்தது. கலா பொலவின் மாலை நேர நிகழ்வானது மியூசிக் மேட்டர்ஸ் மாணவர்கள் மற்றும் பாரம்பரிய மற்றும் கலப்பு நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம்மர்களின் உயிரோட்டமான நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியிருந்தது. கலா பொல 2020 நிகழ்வுக்கு, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அர்ப்பணிப்பான தன்னார்வ ஊழியர்கள் பங்களிப்பு செய்திருந்தனர்.