அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL

CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு

  • 4,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக குழாய் மூலமான இயற்கை எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு, பசுமை ஐதரசனை இயற்கை எரிவாயுவுடன் கலப்பதற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை ATGL பயன்படுத்தும்
  • தற்போதுள்ள உட்கட்டமைப்பை இத்திட்டம் மேம்படுத்தும், வலுசக்தி கலவையை பல்வகைப்படுத்தும், ஐதரசன் சூழல் தொகுதியை உருவாக்கும், CO2 வெளியீட்டை 4% வரை குறைக்கும்
  • இம்முயற்சி சரிபார்க்கப்பட்டு ஏனைய சந்தைகளுக்கும் கொண்டு வரப்படும்

2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடி வரும் நிலையில், அதானி குழுமத்தால் இணைந்து ஊக்குவிக்கப்படும் முன்னணி வலுசக்தி மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனமான Adani Total Gas Ltd. (ATGL) மற்றும் TotalEnergies ஆகியன, ஒரு முன்னோடியான ‘பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை’ ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தின் அஹமதாபாத்தில் 4,000 இற்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு பசுமை ஐதரசனை (GH2) இயற்கை எரிவாயுவுடன் கலப்பதற்கான சமீபத்திய தொழில்நுட்பங்களை ATGL பயன்படுத்தும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்துடன், நீரின் மின்பகுப்பைப் பயன்படுத்தி GH2 உற்பத்தி செய்யப்படுகிறது. ஐதரசன் கலவையானது எரிவாயுவை விட குறைந்த காபன் வெளியீட்டை கொண்டதோடு, அதே வெப்பத்தை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

20224-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒழுங்குபடுத்தல் அனுமதிகளைப் பொறுத்து பசுமை ஐதரசனின் சதவீதம் படிப்படியாக 8% அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கப்படும். இந்த முன்னோட்டத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், படிப்படியாக நகரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் AGTL இன் அனுமதிப்பத்திரம் பெற்ற ஏனைய பகுதிகளுக்கும் ஐதரசன் கலந்த எரிபொருள் வழங்கப்படும். ஆய்வுகளின்படி, 8% வரையிலான ஐதரசன் கலவையானது காபன் வெளியீட்டை 4% வரை குறைக்கும்.

இந்த முன்னோட்ட திட்டத்துடன், ஐதரசன் கலவையை இந்தியாவின் நகர எரிவாயு விநியோகத்தில் ஈடுபடுத்துவது தொடர்பிலும், அதன் தொகுதியொன்றை உருவாக்குவது தொடர்பிலும் தமது ஆரம்ப கற்றலை பகிர்ந்து கொள்ள, ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் கூட்டு சேர ATGL விரும்புகிறது. செயற்பாட்டு அம்சங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பில் கலப்பு எரிபொருளின் இணக்கத்தன்மை பற்றிய அறிவைப் பெறுவதற்கும் பகிர்வதற்கும் இது உதவும்.

Adani Total Gas Ltd. நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுரேஷ் பி. மங்லானி இது தொடர்பில் தெரிவிக்கையில், “சூழலுக்கு நிலைபேறான செயற்பாட்டைக் கட்டியெழுப்புவதில் நாம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 2047 ஆம் ஆண்டுக்குள், இந்தியா எரிசக்தியில் தங்கியிராத சுதந்திரமான நாடாக மாறுவதற்கான தேசிய உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான எமது தற்போதைய அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டமானது, எமது காபன் தடயத்தைக் குறைக்கும் என்பதுடன், இது போன்ற புத்தாக்கமான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நாம் தொழில்துறையின் பரிணாம வளர்ச்சி மற்றும் நிலைபேறான வலுசக்தி தீர்வுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் மும்முரமாக பங்களிக்கிறோம்.” என்றார்.

Adani Total Gas Limited பற்றி

Adani Total Gas Limited (ATGL) ஆனது, இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் ஒரு பகுதியாகும். அத்துடன் அது எரிவாயு விநியோகத்தில் இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமாகும். தொழில்துறை, வணிக மற்றும் உள்நாட்டு (குடியிருப்பு) வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலமான இயற்கை எரிவாயு (PNG) மற்றும் போக்குவரத்து துறைக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றை வழங்குவதற்காக நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்புகளை ATGL உருவாக்குகிறது. இந்தியாவின் 8% மக்கள் தொகையைக் கொண்ட 38 புவியியல் பிரதேசங்களுக்கு (GAs) எரிவாயு விநியோக அதிகாரத்தை கொண்டுள்ளதன் மூலம், ATGL அதன் வலுசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளில் குறிப்பிடும்படியான பங்கைக் கொண்டுள்ளது. குறித்த 38 பகுதிகளில் 19 பகுதிகள் ATGL இனால் நிர்வகிக்கப்படுவதோடு ஏனையவை, Adani Total Gas Limited மற்றும் Indian Oil Corporation Limited ஆகியவற்றுக்கு இடையேயான 50:50 கூட்டு முயற்சியான Indian Oil-Adani Gas Private Limited (IOAGPL) இனால் நிர்வகிக்கப்படுகின்றது. ATGL ஆனது அதானி TotalEnergies E-Mobility Ltd (ATEEL) மற்றும் Adani TotalEnergies Biomass Ltd (ATEBL) ஆகிய முழுமையாக சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களை முறையே e-mobility மற்றும் biomass வணிகங்களுக்காக உருவாக்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: www.adanigas.com

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *